October 04, 2016

பி.எப. மூலம் வீட்டு கடன் பெறும் வசதி....

PF மூலம் வீட்டுக் கடன் வசதி: அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகம்!!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) காப்புறுதித் தொகையாக வைத்து குறைந்த விலை வீடுகளை மாதாந்திர தவணைமுறையில் வாங்கும் வசதி அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

       

      இது தொடர்பாக, தில்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் பி.பி.ஜாய் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

         பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு வீட்டுக் கடன் பெற்றுத்தரும் வசதியை அறிமுகப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

        இதன் மூலம் பிஎஃப் தொகையை காப்புறுதியாகக் கொண்டு புதிய வீடு வாங்கவும், கட்டவும் கடன் பெற முடியும். வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையை

பிஎஃப் கணக்கில் இருந்து செலுத்த முடியும். தொழிலாளரின் பிஎஃப் சேமிப்பில் இருந்து வீட்டுக் கடனுக்கான தவணை செலுத்தப்படும் என்ற வாக்குறுதியை வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் வழங்கும் பிற நிறுவனங்களுக்கும் நாங்கள் அளிப்போம். வீடு கட்ட நிலம் வாங்குதல், வீடு கட்டித் தருதல் போன்ற பணிகளில் எங்கள் அமைப்பு ஈடுபடாது. பிஎஃப் பணத்தை ஆன்லைன் மூலம் முழுமையாகத் திரும்பப் பெறும் வசதி வரும் மார்ச் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்

புதிய ரேசன் கார்டு இனி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்..

இணையதளத்தில் ரேஷன் கார்டு :தீபாவளி முதல் அறிமுகம் புதிய ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, தீபாவளி முதல் துவக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், நான்கு பிரிவுகளில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், பல மாதங்கள் ஆகியும் வழங்குவதில்லை. இதையடுத்து, புதிய ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அமல்படுத்த, உணவு துறை முடிவு செய்தது. சோதனை ரீதியில் துவக்கிய இத்திட்டத்தை, தீபாவளி முதல், முழு வீச்சில் செயல்படுத்த, உணவு துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால், குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க முடிவதில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், அனைத்து விபரங்களும், கம்ப்யூட்டரில் பதிவாகும் என்பதால், கார்டு வழங்க, தாமதம் செய்ய முடியாது. தாமதம் எங்கு என்பதையும் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க முடியும். இந்த திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தீபாவளிக்கு வெளியிட்டு, முழு அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். எப்படி விண்ணப்பிப்பது? : ரேஷன் கார்டு விரும்புவோர், 'tnpds.com' என்ற இணையதளத்தில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில், 'கிளிக்' செய்ய வேண்டும்; கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் குடும்ப தலைவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்; உறுப்பினர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்; அதற்கான, ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்ய வேண்டும். காஸ் சிலிண்டர் விபரம் பதிவு செய்ய வேண்டும்அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்ததும், விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு, தனி எண் வழங்கப்படும். அந்த எண்ணின் மூலம், ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம்.

October 03, 2016

PGTRB தேர்வை உடனடியாக நடத்த வேண்டும். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆசிரியர் கல்வி படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்ற நிலை மாறி, ஆசிரியருக்கு படித்தால் வேலையே கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டிருகிறது. இதற்கு காரணம் பல ஆண்டுகளாகியும் ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளையும், தகுதித் தேர்வையும் நடத்த தமிழக அரசு மறுத்து வருவது தான்.

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டு வந்தனர். முந்தைய அதிமுக ஆட்சியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வின் மூலமும், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வின் மூலமும் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதே நடைமுறை தான் இப்போதும் தொடர்கிறது.

ஆனால், ஆசிரியர்கள் நியமனத்தின் அளவு பெருமளவில் குறைந்து விட்டதால் ஆசிரியர் பணிக்கான கல்வியியல் பட்டம் (பி.எட்) பெற்றவர்கள் பணி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்தவர்களில் 3.82 லட்சம் பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்தவர்களில் 2.69 லட்சம் பேரும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்து விட்டு பல ஆண்டுகளாகியும் வேலையின்றி வாடுகின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. 2013-14, 2014-15ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட 1807 காலியிடங்கள் நீண்ட தாமதத்திற்கு பிறகு கடந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்பட்டன.

அதன்பின், 2015-16 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 2125 காலியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அனுமதி அளித்தது. அவற்றில் 50 விழுக்காடு, அதாவது 1063 பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள 1062 பணியிடங்களை நேரடியாக போட்டித்தேர்வின் மூலம் நிரப்ப கடந்த 7 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பல பள்ளிகளில் 12-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உயர் நிலைப்பள்ளிகள் மேல் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதாலும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாலும் ஏற்பட்ட தேவையை சமாளிக்கும் வகையில் 1600 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க பள்ளிக் கல்வித்துறை தீர்மானித்துள்ளது. அரசின் ஒப்புதல் பெற்று அவையும் நிரப்பப்பட வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை.

தமிழகத்தில் காலியாக உள்ள 2663 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் பெரும் பாலானவை வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன. காலங்காலமாகவே இம்மாவட்டங்கள் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியுள்ள நிலையில், ஆசிரியர்கள் பற்றாக் குறை காரணமாக இம்மாவட்டங்களின் கல்வித் தரமும், தேர்ச்சி விகிதமும் மேலும் மோசமாகும் ஆபத்துள்ளது.

அதேபோல், இளநிலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான தகுதித் தேர்வுகள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடத்தப்படவில்லை. இதனால் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதை காரணம் காட்டி இந்த தேர்வுகளை நடத்த தமிழக அரசு மறுத்து வருகிறது.

அதேபோல், அரசு பள்ளி களுக்கு 4362 ஆய்வக உதவி யாளர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை முடிவுகள் வெளியிடப்பட்டு, பணியமர்த்தம் செய்யப்படவில்லை.

இதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, மாணவ, மாணவியரின் தரமான கல்வி கற்கும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

மேல்நிலை வகுப்பினருக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் உடனடியாக போட்டித் தேர்வை நடத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையும், ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பள்ளி ஆய்வக உதவியாளர்களையும் நியமிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வையும் தமிழக அரசு நடத்த வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி


காலாண்டு தேர்வு Results analysis...

கோவை மாவட்டத்தில், 255 அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு, பொதுத்தேர்வு பாணியில், ஒரே வினாத்தாள் கொண்டு நடத்தப்பட்டது.



இதில், வகுப்பு வாரியாக, முக்கிய பாடங்களில் மாணவர்களின் மதிப்பெண் சதவீதம், தோல்வியடைந்தோர் பட்டியல் தயாரிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், மாநில தரத்திலான மதிப்பெண் பட்டியலில், இடம்பெறும் நோக்கில், காலாண்டு தேர்வு முடிந்ததும், சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுசார்ந்த அறிவிப்பு, அனைத்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பருவம் விடுமுறையை தொடர்ந்து இன்று 3.10.16 பள்ளிகள் திறப்பு..

விடுமுறை முடிந்ததுபள்ளிகள் இன்று திறப்பு...

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செப்., 8 முதல், 23 வரை, காலாண்டு தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு, பொதுவான வினாத்தாள் அடிப்படையில், தேர்வு நடந்தது. செப்., 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

அந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு புத்தகங்கள் இன்று வழங்கப்படுகின்றன.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி..