August 20, 2017

கல்வியில் சிறந்த மாநிலம் : தமிழகத்திற்கு மத்திய அரசு கவுரவம்...

 ''மத்திய அரசு, எந்த நுழைவுத் தேர்வை கொண்டு வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.


       சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று பிளஸ் 1 தேர்வு மாதிரி வினாத்தாள்களை, அமைச்சர் வெளியிட்டார். சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மனோகரன் பெற்றார். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குனர், அறிவொளி உடனிருந்தார்.

பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் இருந்து, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில் தேர்வு நடத்த, அரசு ஆணையிட்டுள்ளது. மூன்று மணி நேரத் தேர்வு, இரண்டரை மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. மொத்த மதிப்பெண், 1,200 என்பது, 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், சிறந்த கல்வியாளர்களாக உருவாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளஸ் 1 மாணவர்கள், மன உளைச்சலின்றி தேர்வு எழுத, உரிய பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்கள், தொடர்ந்து பிளஸ் 2 படிக்க வாய்ப்புள்ளது. பிளஸ் 1ல், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, பிளஸ் 2 படித்தபடி, ஜூன் மாதத்தில் தேர்வு எழுதலாம். மத்திய அரசு, கட்டமைப்பு வசதி, கழிப்பிட வசதியுள்ள, சிறந்த கல்வி கற்றுத் தரும் மாநிலம் என, மூன்று மாநிலங்களை தேர்வு செய்துள்ளது. அதில், தமிழகமும் ஒன்று. மற்ற இரு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் ராஜஸ்தான்.எதிர்காலத்தில், மத்திய அரசு கொண்டு வரும், எந்த பொதுத் நுழைவுத்தேர்வாக இருந்தாலும், அதை தமிழக மாணவர்கள் சந்திக்க, 54 ஆயிரம் கேள்விகள், அதற்கான விடைகள், வரைபடத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளது. இது, 30 மணி நேரம் ஓடக்கூடிய, 'சிடி' ஆகவும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை, கல்வி உயர்மட்டக் குழு பார்வையிட்ட பின், மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

'ஆப்சென்ட்!' : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கும், துறை செயலர் உதயசந்திரனுக்கும் இடையே, பனிப்போர் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகளை, அமைச்சர் வௌியிடும்போது, செயலர் உடனிருப்பார். ஆனால்,
நேற்று செயலர் உதயசந்திரன் வரவில்லை. இது குறித்து, அமைச்சரை கேட்டபோது, கையெடுத்து கும்பிட்டபடி, பதில் கூறாமல் எழுந்து சென்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்