August 19, 2017

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று முடிவெடுப்பது அவர்கள் உரிமை

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று முடிவெடுப்பது அவர்களின் உரிமை என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆங்கில வழி வகுப்புகளை துவங்க அனுமதி வழங்கும்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு உத்தரவிடக் கோரி அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், கடந்த ஜூன் 27ல் 20 கேள்விகளை எழுப்பியிருந்தார். இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் சார்பாக இணை செயலர் நந்தகுமார் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி எழுப்பிய கேள்விகளும், பதில்களும்:


* கடந்த 2012 ஜூலை 17ல் பிறப்பித்த அரசாணையின்படி, தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது? அந்த ஆண்டில் மாவட்டத்திற்கு 10 பள்ளிகள் வீதம் 320 அரசு உயர்நிலை, மேல்நிலை, பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து 6ம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 155 ஆரம்ப பள்ளிகளிலும், 165 மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆங்கில வகுப்புகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2013 - 14ல் மாநிலம் முழுவதும் உள்ள 37,211 அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில், 13,789 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* தமிழகம் முழுவதும் ஆங்கில வழி வகுப்புகளில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? தொடக்க கல்வியில் 2016 -17ம் ஆண்டில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 498 மாணவர்களும், உயர்நிலை கல்வியில் 66 ஆயிரத்து 451 மாணவர்களும் ஆங்கில வழி வகுப்புகளில் படித்து வருகின்றனர்.
* தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தான், ஆங்கில வழியிலும் பாடம் நடத்துகின்றனரா? பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனரா? கூடுதல் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகின்றனர். ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த பிரிட்டீஷ் கவுன்சில் மூலமும் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆங்கில வழி வகுப்புகளை கையாள தங்களால் முடியும் என ஆசிரியர்கள் கருதும்பட்சத்தில் அந்த பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்படும். இதுவரை எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்? 19 ஆயிரத்து 716 பட்டதாரி ஆசிரியர்களும், 11 ஆயிரத்து 459 இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆங்கில வழி வகுப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் எவை?
குறிப்பிட்டு எந்த கல்வித் தகுதியும் நிர்ணயிக்கப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய பாட வாரியாக நியமிக்கப்படுகி–்னறனர். கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் ஆங்கில வழியில் பட்டப் படிப்பை முடித்தவர்கள்.

அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளையே பெற்றோர் தேர்வு செய்ய காரணம் என்ன? தனியார் பள்ளிகள் முறையாக செயல்படுவதாகவும், அங்கு அனைத்து வசதிகளும் இருப்பதாகவும் ம்ககள் கருதுகின்றனர். அங்கு படித்தால் தான் ஆங்கிலப் புலமை கிடைக்கும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் உள்ளது. இது தவறான புரிதல். தமிழகத்தில் 64.16 சதவீதத்தினர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் 35.84 சதவீதத்தினர் மட்டுமே படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை அதிகரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என ஏன் அரசு கட்டாயமாக்க கூடாது? உயர் நீதிமன்றத்தின் இந்த எதிர்பார்ப்பு நியாயமானது தான். ஆனால், ஆசிரியரும் ஒரு பெற்றோர்.

தங்கள் விருப்பப்படி பள்ளியை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. அது அடிப்படை உரிமையும் கூட. அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டு, அவர்களாகவே தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் மட்டுமே இந்நீதிமன்றத்தின் கருத்து நினைவாகும். தற்போது கூட, பல அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். பள்ளிக்கு சரியான நேரத்தில் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
தவறிழைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை ஏதும் அமைக்கப்பட்டுள்ளதா? உதவி தொடக்கக் கல்வி அதிகாரி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் அவ்வப்போது பள்ளிகளில்
ஆய்வு செய்கின்றனர். உடற்கூறு ( பயோ-மெட்ரிக்) வருகைப் பதிவு முறையை ஏன் அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யக் கூடாது? உடற்கூறு வருகைப் பதிவு நடைமுறையை அமல்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது? ஏற்கனவே பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் மொபைல்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அந்த உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கடலூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்