November 25, 2016

சென்னை பல்கலைக்கழக பட்டம் செல்லுமா? செல்லாதா? குழப்பத்தில் மாணவர்கள்


"பல்கலைக்கழகம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. புதிய பிரச்னையாக 150 வருட வரலாற்றில் துணைவேந்தர் இல்லாமல், உயர்கல்வி துறை செயலாளர் கையெழுத்துடன் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிட்டு இருப்பது புதிய புயலை கிளம்பி இருக்கிறது. துணைவேந்தர் கையெழுத்து உள்ள இடத்தை காலியிடமாக வைத்து விட்டு அதற்கு பக்கத்தில் தற்காலிக நிர்வாக குழுவின் தலைவர் என்ற முறையில் கல்வி துறை செயலாளரின் கையெழுத்துயுடன் விரைவில் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்க தயாராகி வருகிறது சென்னை பல்கலைக்கழகம். இந்த சான்றிதழ் செல்லாதது என பேராசிரியர்கள் ஒரு சாராரும், மற்றொரு சாரார் சான்றிதழ் செல்லும் என விவாதித்து வருகிறார்கள். இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள மூத்த பேராசிரியர்களி்டம் பேசிய போது "150 வருட வரலாற்றில் கல்வியாளர் ஒருவரின் கையெழுத்து இல்லாமல் பட்டம் வழங்குவது இது தான் முதல் முறை. பேராசிரியர் ஒருவர் தான் மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர் தான் முனைவர் பட்டத்தை வழங்க வேண்டும். ஆனால் கடந்த பத்து மாதங்களாக துணைவேந்தர் இல்லாத நிலையில் நிர்வாக பணிகளை கவனித்து வரும் குழுவில் உள்ள உயர்கல்வி துறை செயலாளர் தன்னுடைய கையெழுத்தில் சான்றிதழ் வழங்க முடிவெடுத்து இருக்கிறார். தற்போது உள்ள நிர்வாக குழுவில் மூன்று பேருமே கல்வியாளர்களும் இல்லை. பேராசிரியர்களாகவும் இல்லை. இந்த நிலையில் இவர்கள் எப்படி சான்றிதழில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. நிர்வாகக்குழு என்பது எந்த பணியும் முடங்காமல் பார்த்துக்கொள்வதற்கு மட்டுமே. ஆனால், துணைவேந்தரை நியமிக்காமல் அந்த குழுவே தொடர்ந்து பல்கலைக்கழகத்தை நடத்துவதும், பட்டமளிப்பு விழா நடத்துவதும் எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் வழங்கும் சான்றிதழ் நாளை செல்லுப்படியாகாமல் போக வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்ட சான்றிதழை எடுத்துக்கொண்டு உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் வெளிநாட்டுக்கு செல்லும் போது சான்றிதழ் செல்லாதது என சொல்லி விடுவார்கள். மேலும், துணைவேந்தர் இடத்தில் கையெழுத்து போடாமல் காலியாக விடும் போது அது குறித்து கேள்வி எழுப்பவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் பல்கலைக்கழகத்தின் மதிப்பு பெருமளவில் குறையும். இது குறித்து ஆட்சிமன்ற குழுவிலும் எதிர்ப்பும் தெரிவித்து இருக்கிறோம். ஆனால் எதனையும் கேட்காமல் தன்னை துணைவேந்தராக நினைத்து செயல்படுகிறார் உயர்கல்வி துறை செயலாளர். இனி வரும் காலங்களில் யார் வேண்டுமானாலும் பட்ட சான்றிதழில் கையெழுத்து போடும் நிலையை உருவாக்கி வருகிறார். பொதுவாக பட்டமளிப்பு விழா நடப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு எந்த கால அவகாசமும் வழங்கப்படவும் இல்லை. பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமித்த பிறகு பட்டமளிப்பு விழா நடத்தலாம். ஏன் இந்த அவசரக்கதியில் பட்டமளிப்பு விழா நடத்துகிறார்கள்? என்று தெரியவில்லை. இந்த செயல், உயர் கல்வி துறை அதிகாரிகள் யாருக்கு வேண்டுமானாலும் பைபாஸ் சர்ஜரி செய்யலாம் என்பது போல் உள்ளது” என்று சொன்னார். மற்றொரு பேராசிரியரிடம் பேசிய போது "வெளிநாடுக்கு படிக்க செல்லும் போது சான்றிதழ் அனுப்பும் போது யாரும் ஒரிஷனல் சான்றிதழை அனுப்புவதில்லை. மாறாக ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் ஆலோசனைக்குழுவில் அமைப்பில் கொடுத்து சான்றிதழ் உண்மை தன்மை கொண்டது என்று சான்றிதழ் பெற்று நகலை தான் அனுப்புகிறார்கள். ஆகையால் இவ்வாறு அனுப்பும் போது சான்றிதழ் செல்லும். இதனை முறையாக கடைப்பிடிக்கும் போது எந்த பிரச்னையும் இல்லை" என்று சொன்னார். உயர் கல்வி துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது "துணைவேந்தர் இல்லாத போது நிர்வாக பொறுப்பு குழு தான் வழக்கமான பணிகளை கவனிக்கும். அந்த வகையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதும், சான்றிதழ் வழங்குவதும் வழக்கமான பணிகள் ஒன்று தான். இதனை நாங்கள் சட்டத்துறையின் ஆலோசனை கேட்ட பின்பு தான் பட்ட சான்றிதழில் கையெழுத்து போடும் முடிவிற்கு வந்து இருக்கிறோம்" என்று சொன்னார்கள். துணைவேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா அவசியமா? என்று கேட்ட போது " ஒவ்வொரு ஆண்டும் வழக்கம் போல பட்டமளிப்பு விழா நடப்பது தான். ஆகையால் பிரச்னை ஒன்றும் இல்லை” என்கிறார்கள். உயர்கல்வி துறை மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடாமல் விரைவில் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமித்து நல்ல முடிவு எடுப்பது நல்லது."

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்