August 02, 2017

TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வு களில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்குப் பயன்படும் விதமாக தொடர்ந்து பல்வேறு குறிப்பு களையும், வழிகாட்டுதல்களையும் பாடத்திட்டங்களையும் இப்பகுதியில் பார்த்துவருகிறோம். அந்தவகையில் பொருளியல் பாடப்பிரிவின் ஒரு பகுதியாக வறுமை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இனி தொழிற்துறை பற்றி பார்ப்போம்.



தொழில் துறை: தொழில் துறை (industry) என்பது கிடைக்கும் வள ஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே தீர்மானிக்கின்றன.

அவற்றுள் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்தல், வணிகம் போன்ற பல தொழில்கள் அடங்கும்.
தொழில்மயமாக்குதல்:'தொழில்மயமாக்குதல்'என்பது அதிக அளவு உற்பத்தி செய்யும் தொழில் துறை பரவலாக்கம், அதிக நபர்களை வேலைக்கு அமர்த்துதல், பன்னாட்டுச் சந்தையை ஊக்குவித்தல், அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு, கணினி தொழில்நுட்பம் போன்றவற்றின் செயல்பாடு அதிகரித்தலைக் குறிக்கும்.
இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி: ஐந்தாண்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்பு தொழில்துறையின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. 1951 முதல் திட்ட காலத்திலிருந்தே 'சமுதாய நீதியுடனே வளர்ச்சி'என்ற முக்கிய நோக்கத்துடனே தொழில்துறை வளர்ந்து வருகிறது.


பொதுத்துறை என்பது பொருளாதாரத்தின் ஒரு பங்கினை அரசே நிர்வகித்துக் கொள்வதாகும். பொதுத்துறையும், தனியார் துறையும் சேர்ந்து செயல்படும் அமைப்பு கலப்புப் பொருளாதாரமாகும். பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு வருமானத்தில் 1950-51-ல் 7.4 சதவீதமாக இருந்த பங்களிப்பு 1982-1983-ல் 24 சதவீதமாக உயர்ந்தது. தொழில்களின் நான்கு மிக முக்கியப் பிரிவுகள்
1. அடிப்படைப் பண்டங்கள்: சிமென்ட், ரசாயனப் பொருட்கள், உரம் போன்றவை
2. மூலதனப் பொருட்கள்: இயந்திரங்கள், இயந்திரத் தளவாடங்கள், பொறியியல் பண்டங்கள்
3. நுகர்வுப் பண்டங்கள்: மிதிவண்டி, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, இருசக்கர வாகனம், மகிழ்உந்து, உணவுப் பண்டங்கள், குளிர்பானங்கள்
4. இடைவினைப் பண்டங்கள்: பெயின்ட், ஃபிளைவுட், பைப் மற்றும் குழாய்கள், துணைப் பொருட்கள் போன்றவை இந்தியாவில் உள்ள பெருந்தொழில்கள்
இரும்பு எஃகுத் தொழில்: இரும்பு எஃகுத் தொழில்கள் மற்ற எல்லா தொழில்களுக்கும் திறவுகோலாக உள்ளது. அதனால் இரும்பு எஃகுத் தொழில் 'தாய்த்தொழில்'என்று அழைக்கப்படுகிறது. இந்திய இரும்பு எஃகுத் தொழில் நிறுவனம் (SAIL) 1973-ல் நிறுவப்பட்டது. 1992-ல் விலை மற்றும் பகிர்மானக் கட்டுப் பாட்டை SAIL அகற்றியது ஒரு மிகப்பெரிய கொள்கைச் சீர்திருத்தம் எனலாம். விடுதலை பெற்றது முதல் இரும்பு எஃகுத் தொழில் உற்பத்தி ஏறத்தாழ 57 மடங்கு உயர்ந்துள்ளது. 1951-ல் 7 மில்லியன் டன்னாக இருந்த இரும்பு எஃகு உற்பத்தி 2004-ல் 40 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.


நெசவுத் தொழில்: இந்தியாவில் நெசவுத் தொழில் மிகவும் பழமை வாய்ந்த தொழிலாகும். மொத்த தொழிற்துறை உற்பத்தியில் 20 விழுக்காடு நெசவுத்தொழில் மூலம் கிடைக்கிறது. 20 மில்லியன் மக்கள் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். விடுதலைக்குப்பின் 10 மடங்கு உற்பத்தியில் உயர்ந்துள்ளது.
சிமென்ட் ஆலைத் தொழில்: அதிக வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள ஒரு மிகப் பெரிய தொழில் சிமென்ட் தொழில் ஆகும். உலகின் சிமென்ட் உற்பத்தியில் 6 விழுக்காடு பங்கினை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 8.4 விழுக்காடு வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. இந்தியாவில் 365 சிறு தொழிற்சாலைகளும், 120 பெரிய தொழிற்சாலைகளும் உள்ளன. சர்க்கரை உற்பத்தி: சர்க்கரைத் தொழில் வேளாண்மையைச் சார்ந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். கிராமப்புற வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளது. உலகிலேயே அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. உலக சர்க்கரை உற்பத்தியில் 15 விழுக்காட்டினை இந்தியா பெற்றுள்ளது.


தொழிற் கொள்கைகள் 1948-ம் ஆண்டு முதல் தொழிற் கொள்கை தொடங்கப்பட்டது. தொழில்மயமாக்குதலில் ஒரு மிகப் பெரிய மாற்றம் 1951-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட (வளர்ச்சி மற்றும் ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் ஆகும். 1956-ம்ஆண்டைய தொழிற் கொள்கைத் தீர்மானம் 'நாட்டின் நோக்கம் சமதர்ம பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்ளுதல்' என்பதாகும்.


1991-ம் ஆண்டைய தொழிற் கொள்கை மூலம் நாட்டில் பேரியல் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. 1991-ம் ஆண்டு புதிய தொழிற் கொள்கை பங்கு விலக்கல், தனியார் மற்றும் அயல் நாட்டு மூலதனத்தை ஊக்குவித்தல் போன்றவை.
1991-ம் ஆண்டு தொழிற்கொள்கையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் 17-லிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டது.
நலிந்த தொழில் நிறுவனங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், மறுசீரமைக்கவும் தொழில் மற்றும் நிதி மறுகட்டமைப்புக் குழு அமைக்கப்பட்டது. பங்கு விலக்கலில் 1998-ம்ஆண்டு அரசு 51 விழுக்காடுக்கு மேல் 'யுக்தி அளவு' விற்பதற்கு முடிவு செய்து புதிதாக 74 முதல் 100 விழுக்காடாக நிர்ணயித்தது. இனி அடுத்த இதழிலிருந்து இந்திய அரசியலமைப்பு பற்றி பார்ப்போம்.
- முனைவர் ஆதலையூர் சூரியகுமார்



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்