February 12, 2017

அண்ணாமலை பல்கலை.யிலிருந்து மீண்டும் 265 பேரை அரசு கல்லூரிகளுக்கு மாற்ற முடிவு: பேராசிரியர்கள் எதிர்ப்பு...


அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டாவது முறையாக 265 பேரை அரசு கல்லூரிகளுக்கு மாற்ற உயர் கல்வித் துறை முடிவு எடுத்திருப்பதற்கு பேராசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.


பெரும் முறைகேட்டில் சிக்கிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, அங்கு பல்வேறு சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், அந்தப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருந்த 367 உதவிப் பேராசிரியர்களை, மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அவர்களில் பலர், பேராசிரியர் பணிக்குரிய முறையான கல்வித் தகுதியை பெறவில்லை என்பது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி பலர், மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பை 6 ஆண்டுகள் படித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதனாலேயே, அவர்களது நியமனத்துக்கு அரசு கல்லூரி பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த நிலையில், பேராசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி இப்போது மேலும் 265 பேரை அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சிவராமன் கூறியது:
இதுபோல தகுதியற்ற நபர்களை அரசு கல்லூரிகளுக்கு மாற்றி நியமிப்பதால், ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுக் கல்லூரிகளின் கல்வித் தரம் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும், பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் பணியும் பாதிக்கப்படும். எனவே, அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தகுதியான பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்