January 22, 2017

ஜனாதிபதி ஒப்புதல் அளித்தாலும், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய முடியுமா?


டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு, மத்திய சட்டத்துறை, கலாசாரத்துறை, வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அந்த அவசர சட்டம் உள்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்த சூழலில், பீட்டா போன்ற வழக்கின் எதிர்தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி அவசர சட்டத்திற்கு தடை பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:
ஒரு அவசர சட்டம் அதிகபட்சம் 6 வாரங்களுக்கு செல்லுபடியாகும். அதற்குள் நாடாளுமன்றம் கூடினால் அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமானால், அதுகுறித்த தகவலை சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழல் ஆர்.சி.கூப்பர் vs இந்திய அரசு வழக்கில் 1970ல் ஒருமுறை நடந்தது. உடனடி தேவை இன்றி அவசர சட்டம் பிறப்பித்தாலோ, நாடாளுமன்ற விவாதத்தை தவிர்க்க திட்டமிட்டு பிறப்பிக்கப்பட்டாலோ அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1982ல் ஏ.கே.ராய் vs மத்திய அரசு நடுவேயான வழக்கில், சில வழக்குகளில் முன்கூட்டியே கைது செய்யலாம் என்பது தொடர்பான அவசர சட்டம் ஆய்வு செய்யப்பட்டது. குடியரசு தலைவர் அங்கீகாரம் கொடுத்த சட்டமாக இருந்தாலும் கூட, சட்ட நெறிமுறைகளை தாண்டியிருக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியது. ஆனால் வழக்கு அப்படியே முடித்து வைக்கப்பட்டது. காரணம், அதற்குள் நாடாளுமன்றம் மூலமாக அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
அதிகாரம், அவசர சட்டத்தை பிறப்பிக்கும் குடியரசு தலைவர் மற்றும் கவர்னருக்கும் உள்ளது. எனவே, இதில் எதிர் கேள்வி கேட்க முடியாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட்.

ஆனால், டி.சி.வட்வா மற்றும் பீகார் மாநில அரசுக்கு நடுவேயான ஒரு வழக்கில், 1987ல் சுப்ரீம்கோர்ட் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது. அவசர சட்டங்களை வழக்கமாக்கினால், இது அவசர சட்ட ராஜ்ஜியம் ஆகிவிடும் என எச்சரித்தது சுப்ரீம் கோர்ட்.இந்த அடிப்படையில், அரசியலமைப்பு சட்டத்தில் 38 மற்றும் 44வது பிரிவில் செய்யப்பட்ட திருத்தங்களையும் பார்ப்பது அவசியம்.இந்த சட்ட திருத்தம்படி, குடியரசு தலைவர் திருப்தியுடன் வெளியாகும் அவசர சட்டமே இறுதியானது.

இதை கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் இந்த திருத்தம், 1978ம் ஆண்டில் அகற்றப்பட்டுவிட்டதால் இப்போது குடியரசு தலைவர் முடிவையும் கோர்ட்டில் கேள்வி கேட்க முடியும்.
ஜல்லிக்கட்டு அவசர சட்ட பிரச்சினையில், யாராவது அணுகினால் சுப்ரீம்கோர்ட் இதில் எந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி அதை அணுகும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்