January 20, 2017

பந்த் தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைப்பு..


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்தார். இதை தொடர்ந்து விக்கிரமராஜா அளித்த பேட்டி:

தமிழகத்தின் பாரம்பரியமிக்க, தொன்மை ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்களும், இளைஞர்களும் ஒரு எழுச்சி மிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழக வணிகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் வெள்ளிக்கிழமை (ஜன.20) தமிழகம் முழுவதும் கடை அடைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகள் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் முழுவதும் அடைக்கப்படும்.

த.வெள்ளையன்: இதேபோன்று, வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறும்போது, தமிழர் கலாசாரமான ஜல்லிக்கட்டு நடைபெறவும், இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை கடைகள் அடைக்கப்படும் என்றார்.

ஆட்டோ, லாரிகள் ஓடாது
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 4 லட்சம் லாரிகள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறினார்.
இதுதொடர்பாக, சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி கூறியது: ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 4 லட்சம் லாரிகள் வெள்ளிக்கிழமை (ஜன.20) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழக லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் என்றார்.

மணல் லாரி சங்கம் ஆதரவு:அதேபோல, சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பிலும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் லாரிகள் இயக்கப்படாது என, அதன் தலைவர் எஸ்.பி.செல்வராஜ், செயலாளர் எம்.கண்ணையன், நிர்வாகிகள் சந்திரன், முருகேசன், பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஆட்டோக்கள் ஓடாது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை (ஜன. 20) போராட்டத்தில் ஈடுபடப் போவதாக 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என்றும் அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுபோல் தமிழ்நாடு மண் அள்ளும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்