October 06, 2016

சமூக வளைதளங்களை கெடுத்து விடாதீர்கள்!!!

*"சமூக வலைதளங்கள் மீதான மதிப்பை கெடுத்து விடாதீர்கள்"*

கடந்த *2015*ம் ஆண்டு *நவம்பர், டிசம்பர்* மாதங்களில் *சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்* உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, *முற்றிலும் மின்சாரம்
துண்டிக்கப்பட்டு, குடிநீர், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கிடைக்காமலும், பிற மாவட்ட மக்களுடனான அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையிலும்* நாம் அனைவரும் அல்லல் பட்ட போது *முகநூல் (Facebook), கட்செவி அஞ்சல் (WhatsApp), ட்விட்டர் (Twitter)* போன்ற சமூக வலைதளங்களின் சக்தி என்ன என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நாம். அன்று சமூக வலைதளங்களின் பங்களிப்பு மட்டும் இல்லாது போயிருக்குமாயின் சுனாமியை விட மிகப்பெரிய இழப்பை தமிழகம் சந்தித்திருக்கும். ஆனால் தற்போது சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை பார்க்கையில் அதன் மீதான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை நன்கு உணர முடிகிறது.

ஏனெனில் *"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்"* என்ற நிலை மாறி கண்ணால் காண்பதெல்லாம் உண்மை என நினைத்து, அதன் உறுதிதன்மை அறியாமல் அப்படியே பகிர்ந்து வருவது தான் காரணம். மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவராக இருந்தாலும், சாதாரணமானவராக இருந்தாலும் அவரைப் பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட உடனே கண்மூடித்தனமாக பரப்பப்பட்டு வருகிறது.

அதற்கு உதாரணமாக நமது தமிழக முதல்வர் குறித்த வதந்திகளை சொல்லலாம். வெளிநாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு அது தமிழக முதல்வர் என சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டதோடு, இரு நாட்களுக்கு முன்னர் மாலையில் முதல்வர் அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் பேசியதாக ஒரு ஆடியோ செய்தி பரபரப்பாக பரப்பப்பட்டது என்றால் அதற்கெல்லாம் மேலாக முதல்வருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக தவறான தகவலும் தற்போது வரை பரப்பப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கிருபாகரன் அவர்கள் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் பேரன் அருள்நிதியின் மாமனார் எனவும் ஒரு புகைப்படத்துடன் கூடிய தவறான செய்தி ஒன்று வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

இவை மட்டுமா....
*"அவசரம் அனைவருக்கும் பகிருங்கள்"* என சொல்லி *ப்ரியாவின் சான்றிதழ், காஞ்சிபுரம், கோவில்பட்டி பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது குழந்தைகள் பலி* போன்ற தவறான பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறான தகவல்களை பகிரும் முன் அதன் உண்மைதன்மையை உறுதி செய்ய எவரும் முயல்வதில்லை என்பதும், தங்களுக்கு வருகின்ற தகவலை உறுதி செய்யாமல் பிறருக்கு அப்படியே பகிர்ந்து விடுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஒருவன் தினந்தோறும் வயல்வெளியில் ஓடி வந்து *"புலி வருகிறது காப்பாற்றுங்கள்" "காப்பாற்றுங்கள்"* என சத்தம் போட வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவரும் வேலையை அப்படியே போட்டு விட்டு அவனை காப்பாற்ற ஓடி வருவார்கள். அவர்கள் அனைவரும் அவனை காப்பாற்ற அவனுக்கு அருகே ஓடி வந்த உடன் தான் சும்மா சொன்னதாக சொல்லி விட்டு ஓடி விடுவான். இது போல் அடிக்கடி அவன் செய்து மக்களை ஏமாற்றி கொண்டிருந்தான். ஒரு நாள் உண்மையாகவே புலி வந்து விட இவனும் வழக்கமாக கத்துவதைப் போன்று *"புலி வருகிறது காப்பாற்றுங்கள்" "காப்பாற்றுங்கள்"* என சத்தம் போட இது வழக்கமான ஏமாற்று வேலை என நினைத்துக் கொண்டு அவனுக்கு எவருமே உதவ செல்லாமல் தங்களின் வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டனர். இறுதியில் அவனை புலி கொன்று தின்ற கதையை நாம் அனைவரும் ஆரம்பபள்ளி பாடத்தில் "புலி வருது" கதையை படித்திருப்போம்.

அது போல இன்றைக்கு தவறான தகவல்களை, அதன் உண்மை நிலை அறியாமல் பகிர்ந்து, பகிர்ந்து நாம் பகிரும் தகவல்கள் எல்லாமே தவறான தகவல்கள் என நினைக்கின்ற நிலை வரும். அதுமட்டுமன்றி நாம் உண்மையான தகவல்களையே பகிர்ந்தாலும், நமக்கு ஒரு உதவி தேவை என உண்மையையே பதிவிட்டாலும் கூட அது தவறான தகவல் என அனைவராலும் நினைக்கப்பட்டு புறக்கணிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே உங்களுக்கு நன்றாக தெரிந்த அல்லது உங்களுக்கு தெரிய வருகின்ற தகவல்களின் உண்மை நிலை அறியாமல் எவருக்கும் பகிராதீர்கள். அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள். முடிந்த வரை பிறர் கருத்துக்களை பகிரும் போது அதை பதிவிட்ட பதிவரின் பெயரோடு, பகிரப்பட்ட குழுவின் பெயரோடு பகிருங்கள். ஒருவரது உடமைகளையும், சொத்துக்களையும் திருடினால் மட்டும் தான் திருட்டல்ல. பிறரது கற்பனையை, பிறரது கருத்துக்களை திருடினாலும் திருட்டு தான் என்பதை உணருங்கள். நீங்கள் பகிரும் தகவலோடு அதன் பதிவரின் பெயரையோ, குழுவின் பெயரையோ இணைத்து பகிரும் போது தவறான தகவல்களை பரப்புவது எவரென எளிதில் கண்டுபிடிக்க காவல்துறைக்கு பெரிதும் உதவும்.

அதிலும் பிரபலங்கள் அது நடிகர்களாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, சமூக ஆர்வலர்களாக இருந்தாலும் சரி, ஜாதி, மத தலைவர்களாக இருந்தாலும் சரி எவரைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பதிவிடுவதை, பகிர்வதை முற்றிலும் தவிருங்கள். அப்படியே பதிவிட வேண்டும் என்றால் உங்கள் சொந்த கருத்தை ஆணித்தரமாக உங்கள் பெயரிலேயே பதிவிடுங்கள். அது தான் இந்த சமூகத்திற்கும், உங்களுக்கும் நன்மைபயக்கும்.

நாட்டின் மீதும், இந்த சமூகத்தின் மீதும் அக்கறையுடன் செயல்பட்டு, மிகப்பெரிய சக்தி மிக்க, சாதாரண மக்களும் பயன்படுத்தக் கூடிய இந்த சமூக வலைதளங்களை நாட்டின் ஆக்க சக்திக்கு மட்டுமே பயன்படுத்திட சூளுரைப்போம்.
நன்றி : திரு பொன்னுசாமி..

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்