November 06, 2017

2018 பிப்ரவரி வரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சாத்தியமில்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.


🔸  2018 பிப்ரவரி மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

🔹 தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24 -ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்தனர்.


🔸 இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

🔹 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் டிசம்பர் 31 -ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறும், அதுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டார்.

🔸 தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, தேர்தல் நடத்த கால அவகாசம் தேவை என மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் நடத்தப்படும் தேதியை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.

🔹 இந்நிலையில், அதே அமர்வில் நடந்த வழக்கு விசாரணையில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்வுக் காலமான மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடத்த முடியாது. எனவே,தேர்தல் பணிகள் முழுவதையும் முடித்து மே மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிப்பது சாத்தியம் அல்ல என்றார்.

🔸 இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மே 14 -ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கெடு விதித்தனர். தேர்தலுக்கான நடைமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கி, ஏப்ரல் 14 -ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

🔹இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் ஏப்ரல் 3 -ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை முழுமை செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை; அதனால் தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

🔸 இதற்கிடையே மாநிலத் தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்பட்டார். புதிய ஆணையர் நியமிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜூலை இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். எனவே, தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

🔹 இந்நிலையில், 15 நாளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது,

🔸 இந்த விசாரணையில் பதிலளித்த தமிழக அரசு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை நடைபெற்று வருகிறது. 2018 பிப்ரவரியில் தான் தொகுதி மறுவறையறை முடிவடையும், அதனால் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

🔹 15 நாளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கே.கே.ரமேஷ் தொடர்ந்த அந்த பொதுநல வழக்கு திமுகவின் உள்ளாட்சி தேர்தல் வழக்குடன் இணைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்