October 26, 2017

உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம் (Dinamalar)

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,) ஆதிக்கம் செலுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் அக்.,1ல் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படும். இதன் அடிப்படையில் மாணவர் எண்ணிக்கைக்கு அதிகமான உபரி ஆசிரியர்கள், தேவை உள்ள வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவர். இதற்காக மாநில அளவில் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை என எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தற்போது கணக்கெடுக்கப்படும் உபரி ஆசிரியர்களை எந்த அடிப்படையில் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெளிவான வழிகாட்டுதல் இல்லை.

மேலும் அந்தந்த சி.இ.ஓ.,க்களே ஆசிரியர் தேவை உள்ள மற்றொரு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மறைமுக முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை செயலாளர் முருகன் கூறியதாவது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அளவில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரி என கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் வாரியாக அதாவது அறிவியல், கலை, மொழி பாடங்கள் என்ற வரிசையில் முன்னுரிமை அடிப்படையில் உபரி ஆசிரியர் விவரம் தயாரிக்கப்பட்டு மாநில கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்யப்படுவர்.

ஆனால் உதவிபெறும் பள்ளிகளில் அவ்வாறு தெளிவான வழிகாட்டுதல் உத்தரவு இல்லை. பள்ளி நிர்வாகம் மற்றும் சி.இ.ஓ.,க்கள் பார்த்து அவர்களை ஆசிரியர் தேவை உள்ள எந்த பள்ளிக்கும் மாற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதனால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. அரசு பள்ளிகள் போல் உதவிபெறும் பள்ளிக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்