September 29, 2017

வேலை நிறுத்தப் போராட்டம்: அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட
ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 7 - ஆம் தேதியில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அந்த போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அவர்கள் அலுவலகத்துக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தை அங்கீகரிக்கப்படாத விடுப்பாக எடுத்துக் கொண்டு, அந்த நாட்களுக்கான சலுகை, ஊதியம் ஆகியவற்றை வழங்கக் கூடாது என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்காலமாக ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 'போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க வேண்டும். அந்தப் போராட்ட நாள்களை சனிக்கிழமைகளில் பணிப்புரிந்து ஈடுகட்டுவதற்குத் தயாராக உள்ள ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்று தலைமைச் செயலாளர் அளித்த உத்தரவாதம் பதிவு செய்யப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே உத்தரவிட்டப்படி மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க வேண்டும். சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் வேலை பார்த்து, பணிக்கு வராத நாட்களை ஈடுகட்டுவதாக ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்துக்கு வராமலிருந்த நாட்களுக்கும் ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும். சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் அவர்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தனது கடிதத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்