September 27, 2017

அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.


சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் முதல் வரும் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. 

இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது.

 செப்டம்பர் 30ல் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அரசு விழாக்களில், காலை முதல் மாலை வரை அரசு பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்துள்ளதாகக் கூறி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன்சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுபோன்ற அரசு விழாக்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கும்படி கட்டாயப்படுத்த கூடாது என, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக டி.ஜி.பி.க்கும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார் அளித்தும், பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் விழாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

பள்ளி வளாகத்திற்கு வெளியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பிரச்சாரங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்யும் போது, பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும், பள்ளி நிர்வாகங்களும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஆலோசித்து பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலர், டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என பிரதான கோரிக்கை வைத்திருந்தார்.

விதிமுறைகளை உருவாக்கும் வரை இடைக்கால கோரிக்கையாக, செப்டம்பர் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் கூட்டம் உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். 

இந்த வழக்கு நவராத்திரி விடுமுறைகால சிறப்பு அமர்வான நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் முன்னிலை விசாரணைக்கு வந்தபோது. இடைக்கால கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 விதிமுறைகளை உருவாக்கக்கோரும் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், மாணவ மாணவியர்களை பள்ளி நாட்களில் எங்கும் அழைத்துச்செல்வதில்லை என்றும், பள்ளி விடுமுறை நாட்களில்தான் விழாக்கள் நடைபெறுவதாகவும், அதனால் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதால் தடை உத்தரவை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தடையை நீக்க மறுத்துவிட்டனர்.

 தடையை நீக்கும் கோரிக்கை குறித்து விடுமுறைக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வை அணுக அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்