September 25, 2017

தெரிந்த பெயர், தெரியாத விவரம்: மேட்டூர் அணை..

* கர்நாடகம் தொடங்கி தமிழகம் வழியாக ஓடி முடிவில் கடலில் கலக்கிறது காவிரி ஆறு.

* தமிழகத்தில் தர்மபுரியில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியாக மக்களை மகிழ்விக்கிறது.

* சேலத்தில் மேட்டூர் வழியாக சீத்தாமலை, பால மலை ஆகிய இரண்டு மலைகளுக்கிடையே பயணிக்கிறது. மேலும், மேட்டூருக்கு அருகில் சித்தேஸ்வரன் மலை, தங்கமலை ஆகியவையும் உள்ளன.


* நீரைத் தேக்கி விவசாயத்திற்கும், மின்சாரத் தேவைகளுக்கும் பயன் படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓர் அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையே இதற்கு முக்கிய காரணம். முடிவெடுத்தவர் சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளர்.

* தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, 1801-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது; அப்போது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைஎழுப்பியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

* 1923-ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து, சர் சி.பி.ராமசாமி அய்யர், திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா போன்றோர் மூலம் மைசூர் சமஸ்தானத்திடம் அனுமதி பெற முயற்சித்தனர். ஆனால், மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணை தெரிவித்தனர்.

* உடனே, தஞ்சை விவசாயிகளுக்கு புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30 லட்சம் நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.

* ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தானத்தினர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து, அணை கட்ட அனுமதிக் கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைத்தனர். அதன்படி 1923-இல் அணைகட்டத் தொடங்கினர்.

* தொடங்கப்பட்ட ஆண்டு 1923 ; முடிக்கப்பட்ட ஆண்டு 1934. ஒன்பது ஆண்டுகளில் 10,000 பணியாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

* சர் ஆர்தர் காட்டன் முடிவெடுத்த ஆண்டு 1834. பணி முடிவடைந்த ஆண்டு 1934. ஒரு திட்டம் நிறைவேற ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது.

* கட்டி முடிக்கப்பட்டபோது, ஆசியாவிலேயே பெரிய அணையாக இருந்தது. தற்போது, தமிழகத்திலேயே பெரியது என்னும் பெருமையுடன் விளங்குகிறது.

* 1934-ஆம் ஆண்டு கவர்னர் ஸ்டேன்லி என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இதனால், இவர் பெயரால் மேட்டூர் அணை அழைக்கப்பெறுகிறது.

* அணையின் அகலம் 5,300 அடி. உயரம் 170 அடி. ஆயினும் 120 அடி உயரம் வரையே நீரை சேமிக்க முடியும். மொத்த பரப்பளவு 20.2 லட்சம் ஹெக்டேர்.

* மேட்டூர் அணையினால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 2,71,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆனால், அணை கட்டப்பட்ட பகுதியில் பல கிராமங்கள் - கோயில்கள் இடிக்கவேண்டியதாகிவிட்டது என்பதையும் மறக்க முடியாது.

* அணையின் முன்புறம் ஒரு பெரிய நீர்ச்சுரங்கம் அமைக்கப்பெற்று, நீர் மின் திட்டச் சுரங்கம் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

* நீர் ஆதாரம் தருகிறது, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதுடன், இவ்விடம் ஒரு சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது.

* அணை முன்பு ஒரு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

* அணையை வடிவமைத்தவர் ராயல் பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லீஸ். மேட்டூர் அணையின் சிற்பி என்றழைக்கப்படும் இவரின் மார்பளவு உருவச்சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

* அணையில் நீர் வற்றிப்போகும் காலங்களில் ஜலகண்டீஸ்வரர் கோயிலையும், பெரிய நந்தி சிற்பம் வெளியே தெரிவதையும் காணமுடியும்.

* மிக உயர்ந்து நின்று தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
-நவீன் குமார்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்