September 06, 2017

3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடத்தப்பட்டது.


இந்த விழாவில் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேருரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-தமிழகத்தை கல்வி கற்போரின் புகலிடமாகவும், கல்வியென்றாலே தமிழகம்தான் என்று புகழும் இடமாக மாற்றும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.கடந்த 5 ஆண்டுகளில் 12-ம் வகுப்பு பயின்ற 26 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களுக்கு 4 ஆயிரத்து 723 கோடி ரூபாய் செலவில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவுள்ளது.

தேர்வு எழுதுவதற்கு மாணவர்களை ஆசிரியர்கள் தயார் செய்யும் வகையில் 2017-18-ம் ஆண்டிற்கான இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரப்பட்டியல் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. இது மாணவர், பெற்றோரிடையே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தி அவர்களின் மனச்சுமையை குறைத்திருக்கிறது.பதினோறாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற மாற்றத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான போட்டித்தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்ளும் துணிவை மாணவர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாற்றப்படப்போகும் கலைத்திட்ட வடிவமைப்பும், பாடத்திட்டங்களும் இந்தியாவிலேயே, தமிழகத்தை தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையுரை ஆற்றினார். பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் முன்னிலை உரையாற்றினார். பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வரவேற்றார். தலைமைச் செயலாளர்கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்