August 24, 2017

தமிழக அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராடுவதன் காரணம் என்ன?

பள்ளி ஆசிரியர்களும்  அரசுப் பணியாளர்களும் இணைந்து, தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தால், பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் அடிக்கடி ஸ்தம்பிக்கின்றன.


`பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் ஊதியம் வழங்க வேண்டும். ஊதியக் குழுப் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும். ஊதியத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்குள் 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். ஆரம்பப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது சம்பள கமிஷனுக்குப் பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என்பதுவே ஆசிரியர்களின் போராட்டத்தின் முதன்மையான கோரிக்கைகள்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ம் தேதி, சென்னையில் ஆசிரியர்களும் அரசுப் பணியாளர்களும் கூடி தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்று மனு வழங்க முயற்சித்தனர். ஆனால், கோட்டை நோக்கிய பேரணிக்கு அனுமதி மறுக்கப்படவே, ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் விருந்தினர் மாளிகையின் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுக் கலைந்தனர்.

ஆசிரியர்களின் போராட்டம் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த இளங்கோவனிடம் பேசினோம். “தமிழ்நாடு, 2003-ம் ஆண்டு முதல் புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால், ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கும் பணி காலத்தில் இறக்கும் ஆசிரியர்களுக்கும் சரியான முறையில் ஓய்வூதியத் தொகுப்பு நிதியை வழங்குவதில்லை. இதுவரை எங்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் பணம் எங்கு இருக்கிறது எனத் தெரியவில்லை. மத்திய-மாநில அரசுகள், எந்தப் பணத்தையும் எங்களிடம் வழங்கவில்லை. இதனால், தற்போது பணியிலிருந்து ஓய்வுபெறுகிறவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.


மத்திய அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊதியக் குழு பரிந்துரைத்த சம்பளத்தையும் படியையும் பெற்றுவருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் ஊதியக் குழு பரிந்துரைத்த எந்த ஊதியத்தையும் பெறவில்லை. மத்திய அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியர்களாக இருப்பவர்கள், 49,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 34,000 ரூபாய் மட்டுமே பெறுகிறார்கள். இதைத் தவிர, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் களைந்து, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

நாங்கள், திடீரெனப் போராட்டத்தை அறிவிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, எங்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சாந்தா ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ் தலைமையில் புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது, சாந்தா ஷீலா நாயரும் ஓய்வூதியம் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யாமலேயே பதவி விலகிவிட்டார். தற்போது மீண்டும் ஶ்ரீதர் ஐ.ஏ.ஸ் தலைமையில் குழுவை அமைத்திருக்கிறார்கள். இந்தக் குழு, எப்போது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனத் தெரியவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார்.

“அரசியல்வாதிகள், சட்டமன்றத்தில் தங்களுடைய ஊதியத்தையும் ஓய்வூதியத்தையும் இரு மடங்கு உயர்த்திக்கொள்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாக மாணவர்களுக்காக உழைத்துவரும் எங்களுக்கு, முறையாக வழங்கவேண்டிய ஊதியத்தையும் ஓய்வூதியத்தையும் வழங்காமல் இழுத்தடிப்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை'' என்கிறார்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள்.

ஆசிரியர்களிடம் அரசு உடனே பேசி, போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்