July 10, 2017

அரசுப் பள்ளிகளுக்கு என தனியே இணையதளம் விரைவில் தொடங்கப்பட உள்ளது -தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் தகவல்.



அரசுப் பள்ளிகளின் சிறப்புகள், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களைத் தாங்கிய இணையதளம் தொடங்கப்பட இருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு. உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிசப்தம் டிரஸ்ட் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பள்ளிகளுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயசந்திரனோடு ஆசிரியர்கள் கலந்துரையாடலும் நடந்தது.

அதில் ஓர் ஆசிரியர், 'அரசுப் பள்ளிகளுக்கு என வலைதளம் உருவானால், அதில் தங்கள் பள்ளியின் நிகழ்ச்சிகளைப் பதிவதற்கு வசதியாக இருக்குமே" என்று கேட்டார்.

ஆசிரியரின் கேள்விக்கு உதயச்சந்திரன் பதிலளிக்கும்போது, "நீங்கள் சொல்வது மிகவும் நல்ல யோசனை. அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வேலையும் நடந்துவருகிறது.

அதில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வோர் ஒன்றியத்துக்கும், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித் தனிப் பக்கம் எனத் திட்டமிட்டிருக்கிறோம். மிக விரைவில் அந்த இணையதளம் செயல்பாட்டுக்கு வரும். அப்போது அரசுப் பள்ளியின் சிறப்புகள் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் பார்வைக்கு முன் வைக்கப்படும்" என்றார்.

அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும் விதமான அறிவிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில் இந்தத் தகவல் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியோடு பேசப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்