July 09, 2017

10, +1, +2 அரசுப் பொதுத்தேர்வுகளில் பாடங்களுக்கு இடையே இத்தனை நாட்கள் இடைவெளி தேவையா..?


'தமிழகத்தில் ஜவ்வாக இழுக்கும் வகையில் வெளியிடப்பட்ட பொதுத் தேர்வு கால அட்டவணைகளால் மாணவர்களுக்கு சோர்வும், ஆசிரியர்களுக்கு விரக்தியும் ஏற்படும்,' என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.


கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் பொறுப்பேற்றது முதல் மாணவர் நலன், அரசு பள்ளிகளை மீட்டெடுக்கும் வகையில் வெளியாகும் புதிய அறிவிப்புகள் அனைத்து
தரப்பினரையும் வரவேற்பதாக உள்ளன.

மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை போக்க, பொதுத் தேர்வுகளில் மாநில ராங்க் பெற்ற மாணவர் பட்டியலை வெளியிடாதது, CBSE க்கு இணையாக பாடத்திட்டம், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் முன் கூட்டியே வெளியீடு போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 16ல் துவங்கி ஏப்ரல் 20ல் முடிகிறது. இதன் முடிவு மே 23ல் வெளியாகும்.

பிளஸ் 1 தேர்வு மார்ச் 7 ல் துவங்கி ஏப்ரல்16 முடிகிறது. தேர்வு முடிவு மே 30ல் வெளியாகும்.

 பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ல் துவங்கி ஏப்ரல் 6ல் முடிகிறது. இதன் முடிவு மே 16ல்வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பாடங்களே உள்ள, ஏழு தேர்வுகள் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 16 துவங்கி ஏப்., 20 என 35 நாட்கள் நடக்கின்றன.

இதன் அடிப்படையில் ஒரு தேர்வுக்கு சராசரியாக தலா 5 நாட்கள் இடை வெளி உள்ள வகையில் அட்டவணை அமைந்து உள்ளது.

அது போல் பிளஸ் 1 தேர்வு 40 நாட்களும், பிளஸ் 2 தேர்வு 36 நாட்களும் நடக்கின்றன.

 இதனால் மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான 'அதிகபட்ச மனஉளைச்சல்' ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது அதிக நாட்கள் இடைவெளியில் அமைந்த அட்டவணை, மாணவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேல் தேர்வு பீதியில் மாணவர்கள் காலத்தை தள்ள வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர், கல்வியாளர்கள் கூறியதாவது:

மூன்று பொதுத் தேர்வுகளுக்கும் குறைந்த பட்சம் 35 முதல் 40 நாட்கள் இடைவெளியில் நடப்பதாக உள்ளன.

குறிப்பாக, பிளஸ் 2 கணிதம் தேர்வு மார்ச் 12ல் நடக்கிறது.

ஆறு நாட்களுக்கு பின் இயற்பியல் தேர்வு 19ல் நடக்கிறது. அதை தொடர்ந்து 26ல் வேதியியல். ஏப்.,2ல் உயிரியல் தேர்வுகள் நடக்கின்றன.

இதைவிட பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக நாட்கள் இடைவெளி காணப்படுகின்றன. உதாரணமாக, மார்ச் 21ல் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்த பின், 28 ல் தான் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதை தொடர்ந்து ஏப்.,4 ல் ஆங்கிலம் 2ம் தாளும், 10ல் கணிதம், 17 ல் அறிவியல், 20 ல் சமூக அறிவியல் எனஅதிக நாட்கள் இடைவெளி உள்ளன.

இந்த இடைவெளியை குறைக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வுக்கு இடையே உள்ள விடுமுறை நாட்களிலேயே, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம்.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 1 துவங்கும் நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு 16
நாட்களுக்கு பின் துவங்குவது தேவையில்லாதது. ஒவ்வொரு தேர்வுக்கும் தேதிகள் குறுக் கிடாத வகையில் ஒரு மாதத்திற்குள் மூன்று பொதுத் தேர்வுகளையும் நடத்தி முடிக்கும் வகையில் கல்வித்துறை திட்டமிட வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்