June 20, 2017

3,000 தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110-ன் விதியின் கீழ் வெளியிட அறிக்கையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர்
தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hitech Labs) ஏற்படுத்தப்படும். இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது Smart Class Room ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்

பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதனால், இதனை பராமரிப்பது கடினமாகவும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் உள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலுவலர்களும்,  பணியாளர்களும் அதிக அளவு இங்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்த கட்டடம் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்ற பெயரில் அழைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணாக்கர்களும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்