May 03, 2017

5 மணி நேரமாக கோரிக்கை வைத்த ஆசிரியர்கள் : கலந்துரையாடலில் அதிகாரிகள் தவிப்பு.




கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேசி, கோரிக்கைகளை அடுக்கியதால், அதிகாரிகள் தவித்தனர்.



தமிழகத்தில், 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாகவும், ஒன்றாக இணைந்தும் போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும், அமைச்சரையும், செயலரையும் சந்திக்க முடியாததால் அதிருப்தியடைந்தனர்.
ஆறு ஆண்டுகளுக்கு பின், பள்ளிக்கல்வி துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, செங்கோட்டையன்,
ஆசிரியர் சங்க நிர்வாகிகளை குளிர்விக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 சென்னை, தி.நகரில், தன் சொந்த செலவில், நேற்று கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.
இதில், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த, 200 பேர் பங்கேற்றனர்.
சங்க நிர்வாகிகளிடம், அதிகாரிகள் தனித்தனியே, கோரிக்கை மனுக்களை வாங்கினர். அமைச்சர் வந்ததும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச அனுமதித்தார். பல மூத்த நிர்வாகிகள், அரசியல்வாதிகள் போல, அமைச்சரையும், அரசையும் வாழ்த்தி பேசி, அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும், 'ஐஸ்' வைத்தனர்.

சங்க நிர்வாகிகள் சுருக்கமாக கோரிக்கைகளை கூற அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், இயக்குனர் இளங்கோவன், அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி பூஜா குல்கர்னி மற்றும் அதிகாரிகள், மேடையில் அமர்ந்து, கோரிக்கைகளை குறிப்பெடுத்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நிர்வாகிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, நுாற்றுக்கணக்கான கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர்.

 நிகழ்ச்சி முடியும் வரை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், வெளியே அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி நடந்த வளாகத்தில், இரும்பு கேட்டுகள் பூட்டப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளின் விபரம்

பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை நவீன முறையில் மேம்படுத்துவதன் மூலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையின் நிறத்தை கவர்ச்சிகரமான வண்ணத்தில் வடிவமைக்க வேண்டும்.

தொகுப்பூதியம் பெறும் 16,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை உடனடியாகப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒரு துப்புரவாளர், காவலர், கணினி ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டும். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக மாதம் ரூ.3,000 மட்டுமே பெற்று வரும் அரசுப் பள்ளி துப்புரவுப் பணியாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்.

கல்வித் துறையில் ஊழலைத் தடுக்கும் வகையில் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை தேவை.

பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம், தேசியக் கொடி, வினாத்தாளுக்கு வசூலிக்கும் தொகை ஆகியவற்றை அரசே ஏற்க வேண்டும்.

நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம ஊதியம் ஆகியவற்றைச் செயல்படுத்த வேண்டும்.

ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இது போன்ற ஆலோசனைக் கூட்டங்களை அடிக்கடி நடத்துவதன் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தலாம் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்