April 29, 2017

அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் மேலும் வேகத்தை எதிர்பார்க்கலாமா?பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரன் அவர்களின் பதில்.

ஒரு துறையின் உச்சப் பொறுப்புக்கு வருபவர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினால், அத்துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதற்குச் சமீபத்திய உதாரணம் பள்ளிக் கல்வித் துறை.

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை, நூலகங்களுக்குப் புத்துயிர் என்று துரிதமாக இயங்குகிறது பள்ளிக் கல்வித் துறை. அத்துறையின் செயலாளர் உதயச்சந்திரனுடன் ஒரு பேட்டி:

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை தொடர்ந்துகொண்டிருக்கிறதே?

அதைக் கட்டுப்படுத்த கல்வித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்தப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற விவரத்தைக் கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் புகாராகக் கொடுக்கலாம். நடவடிக்கை இல்லை என்றால், என்னிடமே நேரடியாகப் புகார் செய்யலாம். இதுதவிர, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களை முறையாகச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கண்காணிப்பதற்கு வசதியாக இணையம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை உண்டு.

அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் மேலும் வேகத்தை எதிர்பார்க்கலாமா?

அரசுப் பள்ளிகள் மீது தனிக் கவனம் செலுத்துகிறோம். ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வைப் பள்ளி தொடங்கும் முன்பே நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். வெளிப்படைத் தன்மைக்காக அதனையும் இணையம் மூலம் நடத்த உள்ளோம்.

மத்திய அரசுப் பள்ளிகளில் சேரும் அதே ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் மாநில அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க என்ன செய்யப்போகிறீர்கள்?

உரிய கல்வித் தகுதியும், பயிற்றுவிக்கும் திறனும், அனுபவமும் கொண்ட ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் அதிகமாக இருக்கிறார்கள். தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில், சில அரசுப் பள்ளிகள் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஐஎஸ்ஓ தரச்சான்று, ‘ஸ்மார்ட் கிளாஸ்’ என்று சிறப்பாக இயங்குகின்றன. அதுபோன்ற பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வோம். மற்ற பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி, பெற்றோர்கள் தாமேமுன்வந்து பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான சூழல் உருவாக்கப்படும். பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுமா?

நிச்சயமாக. பொதுவாக, ஆண்டு இறுதியில்தான் விளையாட்டு விழாக்களும், ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தேர்வு நேரம் என்பதால், மாணவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள். அல்லது பெற்றோரால் தடுக்கப்படுகிறார்கள். எனவே, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சில மாநிலங்களில் விளையாட்டுத் துறையில் உள்ளதுபோல விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது.

பணம் சம்பாதிப்பது ஒன்றையே இலக்காக வைத்து நமது கல்விமுறை இருக்கிறது என்றுகல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்களே?

நல்லொழுக்கப் பாடங்களை முறையாக நடத்தவும், விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், கட்டாயமாக கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பெரியோர்களை, குறிப்பாக பெற்றோரை எப்படிநடத்த வேண்டும், பொறுப்புள்ள குடிமகனாக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் திட்டம் இருக்கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்