March 27, 2017

வரலாற்று தேடலில் அசத்தும் மாணவர்கள்.. மதிப்பெண்களை பெறும்போது கிடைக்காத ஆனந்தம் இதில் கிடைக்குதாம்!


'மதிப்பெண்கள் மட்டுமே கல்வி அல்ல; மதிப்பெண்களில் கிடைக்காத நிம்மதி, புதிய விஷயங்களை தேடிக் கண்டுபிடிப்பதில் கிடைக்கிறது' என, வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டுள்ள, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கூறினர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், அபர்ணா, விசாலி, அபிநயா, சினேகா, விஜய், ராஜபாண்டியன் மற்றும் ராஜ்கண்ணா. இவர்கள்,

சில நாட்களுக்கு முன், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, புதிய துண்டு கல்வெட்டுகளையும், ஏற்கனவே, தொல்லியல் துறையினர் பதிவு செய்துள்ள கல்வெட்டுகளையும் படி எடுத்து, அவற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளை தொகுத்துள்ளனர்.

 இதுகுறித்து, மாணவ, மாணவியர் கூறியதாவது:எங்கள் பள்ளியில் உள்ள, தொன்மை பாதுகாப்பு மன்றத்தில்,வரலாற்று பாரம்பரிய செய்திகளை ஆவணப்படுத்தும் பயிற்சி பெற்றோம். அதன்படி, ஜெகநாதப் பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை, படி எடுத்துள்ளோம்.

 தலைமை ஆசிரியை பிரேமா, தொன்மை பாதுகாப்பு மைய பொறுப்பாசிரியர் ராஜகுரு, கோவில் அதிகாரி கண்ணன் ஆகியோர் உதவினர்.அதிலுள்ள எழுத்துக்கள், பிற்கால பாண்டியர் காலமான, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

துண்டு கல்வெட்டுகளில், எழுத்துக்கள் சிதைந்துள்ளன. கல்வெட்டுகளில், மன்னர் பெயர் ஏதும் இல்லை. இக்கோவில்,தல வரலாற்றின்படி, இங்கு பட்டாபிஷேக ராமருக்கு தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள ராமரை, 'இலங்கை வழி திறந்த பெருமாள்' என்றும், சீதையை, 'மாதக சொக்கப்பிராட்டி' என்றும் கல்வெட்டில் குறிப்பிட்டு உள்ளனர். சிவகாம சுந்தரநல்லுார் என்ற ஊரில், ஏற்கனவே பள்ளிசந்தமாக, புத்த, சமண கோவில்களுக்கு வழங்கப்பட்ட இடம்; பழந்தேவதானமான, ஏற்கனவே கோவில்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் தவிர, பிறபகுதிகள் ஜெகநாதப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கான சான்றுகள் கல்வெட்டில் உள்ளன.

இதில் குறிப்பிட்டுள்ள, 'சிவகாம சுந்தரநல்லுார்' திருவாடானை அருகில் உள்ள, ஆனந்துாராக இருக்கலாம்.

பல பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலேயே, பத்தாம் வகுப்பு பாடம் நடத்தப்படும் இக்காலத்தில், படிப்பையும் தாண்டி, அறிவியல் மற்றும் வரலாற்று தேடலில் ஈடுபடும் போது, சுயசிந்தனை வளர்வதுடன், தன்னம்பிக்கையும் அதிகரித்து வருகிறது.

மதிப்பெண்களில் கிடைக்காத நிம்மதி, புதிய விஷயங்களை தேடிக் கண்டுபிடிப்பதில் கிடைக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்