February 10, 2017

TNTET சமூக அறிவியல் பாடத்தில் 60 க்கு 60 பெறுவது எப்படி?


கலை பட்டய படிப்புகளான BA History, English, Tamil போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - II ல் பெருமளவு கேள்விகள் (60/150) சமூக அறிவியல் பாடத்திலிருந்தே கேட்கப்படுகின்றன.
வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு இப்பகுதி மிகவும் எளிதாகப்பட்டாலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற கலைத்துறை மாணவர்களுக்கு இது ஒரு சோதனையாகவே இருக்கிறது.
கசப்பான மருந்தாக உள்ள சமூக அறிவியல் பாடத்தை இனிப்பாக மாற்றி  வரலாறு படிக்காத பிற கலைத்துறை மாணவர்களையும் சமூக அறிவியல் பகுதியில் அதிக மதிப்பெண் பெறச்செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

மேல்நிலைப்பள்ளியானாலும் சரி, கல்லூரிப் படிப்பானாலும் சரி பொதுவாக வரலாற்றுத்துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களை மற்ற பிரிவு மாணவர்கள் "அசோகர் மரம் நட்டார் என்பதை படிக்க மூன்று வருடமா?" எனக் கேலி செய்வதை பார்த்திருப்பீர்கள். ஏன் இதை படிக்கும் நீங்களே உங்கள் நண்பர்களை கேலி செய்திருக்கலாம். ஆனால் இப்போது புரிந்திருப்பீர்கள் இங்கும் சில கடினமான விசயங்கள் இருக்கிறது என்று. B.A., B.Ed., ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு (+2 வில் கணிதம்-உயிரியல்) சென்ற முறை நல்ல மதிப்பெண்ணுடன் ஆசிரியர் தகுதித்தேர்வை முழுமை செய்து தற்போது வேலையில் இருக்கும் நண்பர் ஒருவருடன் சமீபத்தில் உரையாடும் போது, அவர் சில பயனுள்ள தகவல்களை தந்தார். அவற்றை கோர்வையாக சேர்ந்து இங்கே உங்களுக்கு வழங்குகிறேன்.

TNTET தேர்வுக்கு தயாராவதற்கான 6 வது முதல் 10 வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடம் கீழ்கண்ட நான்கு பிரிவுகளில் இருக்கும்.

வரலாறு (History)
புவியியல் (Geography)
குடிமையியல் (Civics or Polity)
பொருளாதாரம் (Economics)

1.இனிக்கும் வரலாறு :

"உங்கள் எதிர்காலத்தை நிங்களே தீர்மானிக்க வேண்டுமென்றால், வரலாற்றைப் படியுங்கள்" - கன்ஃபூசியஸ்

வரலாறு என்றாலே காலங்கள், நிகழ்வுகள் மற்றும் பெயர்கள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். உண்மையும்  அது தான். ஆனால் உண்மையான ஆர்வத்துடன் படித்தால் வரலாறு போல் இனிப்பது ஒன்றுமில்லை.

வரலாறு =கதை :

ஒரு வரலாறு பாடப் பகுதியை படிக்க துவங்கும் முன்னர் "அதிலுள்ள வருடங்களையும், பெயர்களையும் எப்படி மனப்பாடம் செய்வது?" என்று பதட்டப்படாமல், ஒரு கதையை படிப்பது போல் படிக்கத் துவங்குங்கள்.

உதாரணமாக, 6 ஆம் வகுப்பிலுள்ள சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நாகரிகம் இருந்தது , அந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் உணவு முறை, நகர வாழ்க்கை, கடவுள் வழிபாடு, வணிகம் இவைதான் சாராம்சம். மொத்தமாக ஒரு முறை வாசித்து விட்டு இப்போது ஒரு முறை வாசித்தவற்றை அசை போடுங்கள்.  இரண்டாவது முறை வாசிக்கும் போது "லோத்தல் - துறைமுக நகரம் - தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது" , "காளிபங்கன் -என்ன சிறப்பு ?" என பல உண்மைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். இப்படியே பல்வேறு அரசுகள், அரசர்கள், போர்கள் போன்றவற்றையும் கதையைப் போல படிக்கத்துவங்கினால். வரலாற்றில் இன்னொரு M.A., பண்ணுவதற்கு கூட ஆர்வம் வருமளவிற்கு வரலாற்றை நீங்கள் ரசித்து ருசித்து படிப்பீர்கள்.

காலக்கோடுகளின் மந்திரம்

வரலாற்றில் வரும் வருடங்களை எளிதாக நினைவு கூற "காலக்கோடு முறை" மிக சிறந்தது.  ஒவ்வொரு பகுதிக்கும் தனிதனி காலக்கோடுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். கடைசியாக பார்க்கும் போது "சிந்து சமவெளி முதல் அ.தி.மு.க ஆட்சி 2017 வரை" வருடங்களை மிகவும் எளிதாக உங்களால் கூற முடியும்.

உதாரணமாக 'இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை" கீழ்க்கண்ட காலக்கோட்டின் மூலம் விளக்கலாம்.

1885 - இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
1905-வங்கப்பிரிவினை
1906 - முஸ்லிம் லீக் தோற்றம்
1907-சூரத் பிளவு (காங்கிரசுக்குள்)
1909-மின்டோ-மார்லி சீர்திருத்தம்
1919-மாண்டேக்-செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
1920 -கிலாபத் இயக்கம்

-- இப்படி நீங்களே ஒரு காலக்கோட்டை தயாரித்து, ஒவ்வொரு வருடத்தோடும் தொடர்புடைய நிகழ்வுகளை, பெயர்களை மிகவும் எளிதாக நினைவில் கொள்ளலாம்.

 2. புதுமையாகும்புவியியல்

புவியியல் பாடப்பகுதியை பார்த்தாலே பலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் சில முக்கியமான உபகரணங்களுடன் படிக்கும் போது அது மிகவும் எளிதாக மாறிவிடும். அந்த உபகரணங்கள் Atlas மற்றும் Maps தான். உதாரணமாக கண்டங்களைப் பற்றி படிக்கிறீர்கள் எனில், நிச்சயமாக ஒரு உலக வரைபடத்தை கையில் எடுத்துக்கொண்டு அமெரிக்கா, ஆசியா என ஒவ்வொரு கண்டங்களையும்  நீங்களே கண்டுபிடியுங்கள். அது போல, எந்த ஒரு இடத்தின் பெயரை படிக்கும் போதும் அவற்றை உலக அல்லது இந்திய வரைபடத்தில் பாருங்கள். உலகில் உள்ள நாடுகள், நதிகள், கால நிலைகள் எல்லாமே இந்த வரைபடங்களில் உள்ளடக்கம். புவியியல் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் மதிப்பெண்கள் உட்பட.

3.குடிமக்கள் அறிய வேண்டிய குடிமையியல் :

ஒரு சாதாரண குடிமகன் அறிநதிருக்க வேண்டிய தகவல்களான, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், தேசிய சின்னங்கள், அரசியல் முறை, பாராளுமன்றம், சட்டமன்றம், குடியரசு தலைவர், பிரதமர் என அனைத்தும் ஆர்வமூட்டும் விசயங்களே இருப்பதால். குடிமையியல் பகுதிக்கு தயாராக உங்களுக்கு தனியே ஆலோசனைகள் தேவையில்லை.

4. புரிந்து படிக்க வேண்டியதுபொருளாதாரம் :

முதலில் பொருளாதாரத்தைப் பற்றிய அடிப்படை கருத்துக்களை சந்தேகமின்றி புரிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக Inflation, NDP, NGP, FDI போன்ற வார்த்தைகளை படிக்கும் போது சரியான புரிதல் இன்றி படிப்பீர்கள் எனில் உங்கள் மொத்த நேரமும் முயற்சியும் வீணாகி விடும். எனவே பொருளாதார பாடப்பகுதியை படிக்கும் போது அவற்றில் வரும் முக்கியமான concept ஐ புரிந்து கொண்டு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

Thanks to : D.விஜயன்,
சமூக அறிவியல்
பட்டதாரி ஆசிரியர்
அரியலூர் மாவட்டம்..

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்