February 27, 2017

அரசு அறிவித்து தேர்வு நடத்தியகாலிப் பணியிடங்களை நிரப்ப புதிய முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?- மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்ப்பு..

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசுத் துறைகளில் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளதால், அந்த காலியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு மே 31-ம்தேதி அரசுப் பள்ளிகளுக்கான ஆய்வக உதவியாளர் தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வை, சுமார் 8 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வு நீதிமன்ற வழக்குக்கு உள்ளாகி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சில வழிகாட்டல்களின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல, கால்நடைத் துறையில் கால்நடை ஆய்வாளர் நிலை 2, கதிரியக்கர், ஆய்வக உதவியாளர், லேப் டெக்னீஷியன், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட 5 பணியிடங்கள் உட்பட 339 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும், 36 அலுவலக உதவியாளர், 1,425 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என்றும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஏழரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படவில்லை. நேர்காணல் நடத்தப்பட்ட 36 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

அதேபோல, மின்வாரியத் தில் உள்ள 375 உதவி செயற் பொறியாளர் பணியிடங்களுக்கு நீதிமன்ற வழிகாட்டலுடன் தேர்வு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டும், இதுவரை நேர்காணல் நடத்தப்படவில்லை. இது தவிர, தொழில்நுட்ப உதவியாளர் பணியிடமும், கள உதவியாளர்கள் பணியிடமும் நிரப்பப்படாமல் உள்ளன.
இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த புதிய முதல்வர் முன்வர வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய அனைத்துப் பணியாளர், பொறியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சண்முகம் கூறும்போது, “அரசுப் பணிகளுக்கு தேர்வு நடத்தும் அரசு, அதற்கான நேர்காணல் நடத்தும்போது மதிப்பெண்களை பென்சிலால் குறிக்க அனுமதிக்கிறது. இதனை பயன்படுத்தி ஒரு சில முறைகேடுகள் நடைபெறும்போது ஒட்டுமொத்த நியமனங்களும் நீதிமன்றத்தின் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு தடை ஏற்படுகிறது. எனவே, நேர்காணல் மதிப்பெண்ணை பேனாவால் குறிக்கவும், நேர்காணல் முழுமையும் வீடியோ பதிவு செய்யப்படவும் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


அனைத்திந்திய மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் கூறும்போது, “தமிழக அரசு அறிவித்த பல போட்டித் தேர்வுகள், நடத்தப்பட வேண்டிய நேர்காணல்கள் குறித்து நினைவூட்டும் விதமாக புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், தலைமைச் செயலாளருக்கும் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை வரும் 28-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் நடத்தவுள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்