February 27, 2017

டெட்' தேர்வில் ஆரம்பமே குளறுபடி : டி.ஆர்.பி., மீது தேர்வர்கள் அதிருப்தி


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், விண்ணப்ப அச்சடிப்பு பிரச்னையால், ஆரம்பமே குளறுபடியாகி உள்ளது. அதனால், மீண்டும் புதிய அறிவிக்கை வெளியிட வேண்டிய சூழ்நிலை
உருவாகியுள்ளது. 'டெட்' தேர்வுக்கான அறிவிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யானது, பிப்., 24ல் வெளியிட்டது. அதில்,
'விண்ணப்ப விற்பனை, மார்ச், 6ல் துவங்கும்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மார்ச், 23க்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற தேர்வுகளில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, குறைந்த பட்சம், ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும். ஆனால், இந்த தேர்வுக்கு, 17 நாட்களே அவகாசம் தரப்பட்டுள்ளதால், பட்டதாரிகளும், தனியார் பள்ளி ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, 'டெட்' தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் கூறியதாவது: 'சிடெட்' என்ற மத்திய அரசின், 'டெட்' தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. அதேபோன்ற, மாநில அரசின், 'டெட்' தேர்வை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதில், சி.பி.எஸ்.இ., போல விதிகளைப் பின்பற்றவில்லை.அறிவிக்கை வெளியாவதற்கு, ஒரு மாதத்திற்கு முன்னரே, முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், ஒரு வாரத்திற்கு முன், புதிய பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், தேர்வு தேதியை அறிவித்தனர். டி.ஆர்.பி., தாமதமாக வெளியிட்ட அறிவிக்கையில், விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும் என, தெரிவிக்கவில்லை.

விண்ணப்பங்களை தவறாக அச்சிட்டதால், மீண்டும் விண்ணப்பங்கள் அச்சடிப்பதாக கூறப்படுகிறது. டி.ஆர்.பி., செய்த தவறால், விண்ணப்பம் வழங்கும் தேதி, மார்ச், 6 வரை தாமதமாகியுள்ளது. இந்த தவறுக்கு, அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்; அவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 17 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு, விண்ணப்பிக்கும் அவகாசத்தை, ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், டி.ஆர்.பி., மீது வழக்கு தொடரும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்