February 03, 2017

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பிப்.13 முதல் விண்ணப்பம் வழங்க நடவடிக்கை; டிஆர்பி-கல்வி அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை..


நெல்லை- ஆசிரியர் பணிக்கு இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்ற சட்டம் மத்திய அரசால் அமலுக்கு
வந்ததையடுத்து தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதமும், அதே ஆண்டில் அக்டோபர் மாதம் நேரத்தை அதிகரித்து துணைத்தேர்வும் நடத்தப்பட்டது. பின்னர் 2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. வழக்கு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் வழக்குகள் முடிவுக்கு வந்ததால் நடப்பு ஆண்டில் மீண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து இத்தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடவடிக்கை எடுத்து வருகிறது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் பொதுத்தேர்வு நடந்து முடிந்த பின்னர் வருகிற ஏப்ரல் மாத இறுதி நாட்களில் இத்தேர்வை நடத்த உத்தேசித்துள்ளனர். 2 நாட்கள் தேர்வு நடத்தவும் முதல் நாள் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வும் அடுத்த நாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வும் நடத்தப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. வருகிற பிப்ரவரி 13ம் தேதியில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை விண்ணப்பங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே தகுதி தேர்வு எழுதியவர்கள் தங்கள் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள மீண்டும் எழுத வாய்ப்புள்ளது.
எனவே சுமார் 10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்த மெகா தேர்வை எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து டிஆர்பி அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை மாநில, மாவட்ட அதிகாரிகள் இன்று சென்னையில் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்தாலும் ஏப்ரல் இறுதியில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்காக பல பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியிருக்கிறது. எனவே அந்த மையங்களை தவிர்த்து பிற பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தலாமா, இத்தேர்வுக்கு 2 நாட்களுக்கு தேவைப்படும் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட விபரங்கள் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்