சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தேவையில்லை என்பது, கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30,000 பேர் இருப்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு இப்போதைக்கு நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் ஏற்கனவே தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தேவையில்லை என்பது கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் தெரிவிக்கப்பட்ட கருத்து ஆகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது போன்று, பணியிடங்கள் காலியாக இருந்தால் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல. மாறாக, காலியிடங்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டிய தகுதி வழங்கும் நடவடிக்கை ஆகும்.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தகுதித் தேர்வு நடத்துவது குறித்து 15.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த 181-வது அரசாணையின் பிறசேர்க்கை 11 ஆவது பிரிவில்,‘‘ ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது தகுதித் தேர்வை அரசு நடத்த வேண்டும்.
இதில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளுக்கு மிகாமல் அரசு நிர்ணயித்துக் கொள்ளலாம். அத்துடன் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்வதற்காக மீண்டும் மீண்டும் தேர்வை எழுதலாம்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பிரிவை அமைச்சர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விதிகளின்படி மத்திய அரசால் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இத்தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றாலும், அதைக் கருத்தில் கொள்ளாமல் ஆண்டு தோறும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வு(TET) ஆண்டுக்கு ஒருமுறையும், தேசிய தகுதித் தேர்வு(CET) ஆண்டுக்கு இருமுறையும் நடத்தப்படுகின்றன. இவற்றில் வெற்றி பெறுவது ஆசிரியர் பணிக்கான தகுதி தானே தவிர, உத்தரவாதமல்ல.
இதனால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 30,000 பேருக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை என்று கூறி தகுதித் தேர்வு நடத்தப்படாது என்பது அறியாமையின் உச்சத்தில் அமைச்சர் இருப்பதையே காட்டுகிறது.
அமைச்சரின் இந்த அறிவிப்பால் இரு வகையான பாதிப்புகள் ஏற்படும். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தான் கடைசியாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் இன்னும் 3 ஆண்டுகளில் காலாவதியாகியாகிடும்.
அதற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரம் பேருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. அதனால் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இத்தேர்வு நடத்தப்பட்டால் விருப்பப்பட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தங்களின் தகுதியை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை பொறுத்து 60% வரை தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படுவதால், ஒருமுறை குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தால் அவர் அடுத்த ஆண்டே மீண்டும் தேர்வெழுதி அவரது தகுதியை உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால், அமைச்சரின் அறிவிப்பால் இந்த இரு வாய்ப்புக்களும் பறிக்கப்படுகின்றன.
இதற்கெல்லாம் மேலாக ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவர். கடந்த 4 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படாததால், அந்த காலத்தில் ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் அந்த பணிக்கு தகுதி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால், அவர்கள் படித்த படிப்பு பயனற்றதாகிவிட்டது. ஆசிரியர் பணிக்கு தகுதி பெற விரும்புவோருக்கு தகுதித் தேர்வு நடத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால், அந்தக் கடமையை செய்யாததன் மூலம் 4 ஆண்டுகளில் 25 லட்சம் பேர் ஆசிரியர் ஆவதற்கு தகுதி பெறும் உரிமையை தமிழக அரசு மறுத்திருக்கிறது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்