January 30, 2017

ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை உள்ளாட்சி; அதிகாரிகளின் பதவிகாலம் 6 மாதம் நீட்டிப்பு - சட்டசபையில் மசோதா தாக்கல்..


உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஜூன் மாதம் வரை நீட்டிக்கும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதனால், கடந்த அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ‘‘வார்டுகளில் இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட விதம் விதிகளுக்கு முரணாக உள்ளது’’ என்று கூறி, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது. மேலும், இடஒதுக்கீடுகளை முறையாக பின்பற்றி அறிவிப்பு வெளியிட்டு, டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன்பின், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஊராட்சிகள்.

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். அந்த சட்ட திருத்த முன்வடிவில் கூறப்பட்டுள்ளதாவது: உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் பொறுப்பை கவனிக்க 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது தமிழகத்தின் வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதத்தில்தான் பெறப்பட்டது. மேலும் 2017ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை 12, 10ம் வகுப்புகளுக்கான இறுதி தேர்வு நடைபெற உள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலான வாக்குப்பதிவு அலுவலர்கள், பள்ளி, கல்வித்துறையின் தேர்வு பணியின் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களை அந்த நேரத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த முடியாது.
மேலும், பள்ளி கட்டிடங்கள்தான் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பணிகளை கவனிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைவதை கருத்தில் கொண்டு அவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் அதாவது 2017ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரையோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்த பின்னர் கூடும் முதற்கூட்டம் நடைபெறும் வரையோ இதில் எது முந்தியதோ அதுவரை உள்ளாட்சி அதிகாரிகளின் பதவி நீட்டிப்பு செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் வேலுமணி கூறினார்.

இந்த சட்டமசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதால், மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்