அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் பயன்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது போல், அனைத்து அரசுத் துறை அலுவலங்களில், மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,' என சமூக ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, தமிழக அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த தாக்கலான வழக்கில், 'அரசு தெளிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகளையும் வழக்கறிஞர்கள் கமிஷனர்கள் ஆய்வு செய்து அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவிற்கு பின், அரசு பள்ளிகளில் கழிப்பறை பயன்பாடு குறித்து பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கழிப்பறையை பராமரிக்க கல்வித்துறையில், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் உள்ள அலுவலகங்களில், குறைகள் தெரிவிக்க மற்றும் கோரிக்கைகள் அளிக்க மக்கள் செல்லும்போது, 90 சதவீதம் அலுவலகங்களில் மக்களுக்கான பொதுக் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி இல்லாத நிலை தான் நீடிக்கிறது.
அப்படியே வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், அந்த அலுவலகங்களுக்கு நாள் ஒன்றுக்கு வந்து செல்லும் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, வசதிகள் இல்லாதது அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது. 'புகார் அளிக்க செல்லும் இடத்திலேயே புகார்கள் உள்ளதை யாரிடம் சொல்வது' என மக்கள் தவிக்கின்றனர். அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு நிதி போல் தான், அரசு அலுவலகங்களை பராமரிக்கவும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் குறித்து கண்டுகொள்ளப்படுவது இல்லை என புகார் எழுந்துள்ளது. கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது : அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நீதிமன்றத்தின் அக்கறை வரவேற்கத்தக்கது. அனைத்து வரிகளும் செலுத்தும் மக்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கும் கடமை அரசுக்கு உண்டு. அவ்வப்போது நீதிமன்றங்களே இதுபோன்று தானாக முன்வந்து மக்கள் பிரச்னைகளை கையில் எடுக்கும்போது தான் தீர்வும் கிடைக்கிறது. இதனால் தான் நீதித்துறை மீதான நம்பிக்கை மக்களுக்கு இன்னும் உள்ளது
. அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை நிலைபோல், அரசு அலுவலகங்களில் உள்ள அடிப்படை வசதிகள் நிலை குறித்தும், ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி சார்பில் பராமரிக்கப்படும் கழிப்பறைகள் செயல்பாடுகள் பெரும்பாலும் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்தும் நீதிமன்றம் தானே முன்வந்து நடவடிக்கை எடுத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டால் பல கழிப்பறைகள் சரியான கட்டணத்திலும், சுத்தம், சுகாதாரமாக பராமரிக்கும் நிலை ஏற்படும், என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்