November 29, 2016

மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் !!


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு

உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அது தொடர்பான அரசாணையை எதிர்த்தும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
 இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடாத வண்ணம் பிரமாணப் பத்திரத்தை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்.



அவ்வாறு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்ததனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தலில் வார்டு வரையறை செய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி கிருபாகரன், டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை திங்கள்கிழமை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடைபெற்றது.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.குமார், குற்றப் பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.
 இந்த உத்தரவை அமல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகளிடம் பதில் பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம் தேவை என்றார்.

இதையடுத்து நீதிபதி கூறியதாவது: குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பது தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனக் கூறினாலும், அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போதே பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை திறமையாக செயல்படுத்த முடியுமா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த கவலையும் கொள்ளத் தேவையில்லை. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

அதில் ஏதாவது நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம். தேர்தல் அறிவிப்பு வரை காத்திருக்காமல் இந்த உத்தரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து பதிவு பெற்ற அரசியல் கட்சியினருக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதி, இந்த உத்தரவை விரைந்து அமல்படுத்த வேண்டும் எனக் கூறி, விசாரணையை ஜனவரி 3-க்கு ஒத்தி வைத்து நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்