October 31, 2016

குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கிறார்களா? இதெல்லாம் செக் பண்ணுங்க ப்ளீஸ்!


நீங்கள் அலுவலகம் போய்க்கொண்டிருக்கும்போது, 'சமையலறை லைட்டை அணைத்துவிட்டோமா... பீரோவைப் பூட்டிவிட்டோமா' என்று திடீரென ஒரு சந்தேகம் எழுந்து மனதைப் பதறவைக்கும். ஆனால், எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்துவிட்டு வந்திருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற எந்த நினைப்பும்
முன்னெச்சரிக்கையாக வருவதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். வீட்டைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பே இதெல்லாம் வந்திருந்தால், ஒரு தடவைக்கு இரு தடவையாக செக் செய்துவிட்டே புறப்பட்டிருக்க முடியும்.
சரி, வீட்டைவிட்டு கிளம்பும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போமா...!

1.கூல்டிரிங்ஸ் பாட்டில்:

கூல்டிரிங்ஸ் வாங்கிவந்து குடித்துவிட்டு, அந்த காலியான பாட்டிலை வேறு ஒரு பயன்பாட்டுக்காக வைத்திருப்பீர்கள். ஒரு நாள், அதில் மண்எண்ணெயையோ, கிளீனிங் கரைசலையோ ஊற்றிவைக்கக்கூடும். அதை அறியாத குழந்தைகள், பாட்டிலில் கூல்டிரிங்ஸ்தான் இருக்கிறது என நினைத்து அதை எடுத்துக் குடிக்க நேரும். அதன் பின் குழந்தை படும் கஷ்டத்தை நினைத்துப்பாருங்கள்.
என்ன செய்ய வேண்டும்? : நீங்கள், அந்த பாட்டிலின் மேல் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை நீக்கிவிட்டு அல்லது மறைத்துவிட்டு, அதை அவர்கள் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

2.மிக்ஸி

மிக்ஸியைப் பயன்படுத்திவிட்டு அதே இடத்தில் வைத்திருந்தால், குழந்தைகள் அரைத்துப்பார்க்க முயற்சித்து, கையை காயப்படுத்திக் கொள்ளலாம்.
  என்ன செய்ய வேண்டும்? : அறைத்த பின், மின் இணைப்பிலிருந்து நீக்கி, மிக்ஸியை அந்த இடத்திலிருந்து எடுத்து வேறு இடத்தில் வைத்துவிடவும். கண்ணில் படாதபடி மூடியும் வைக்கலாம்.

3.கேஸ் ஸ்டவ்:

பெற்றோர் வெளியே சென்றதும் குழந்தை, கிச்சனுக்குள் சென்று விளையாட்டாக ஸ்டவ்வை ஆன் செய்துவிட்டு பற்றவைத்துப்பார்க்க முயற்சிக்கலாம். இது விபரீதத்துக்கு வழி வகுத்துவிடக்கூடும்.
என்ன செய்ய வேண்டும்? :  வெளியே செல்லும்போது சிலிண்டரின் ரெகுலேட்டரை ஆஃப் செய்துவிடவும். தீப்பெட்டி அல்லது லைட்டரை கைக்கு எட்டாதபடி வைக்கவும்.

4. தண்ணீர்த்தொட்டி

வீட்டில் இருக்கும் தண்ணீர்த்தொட்டியில் ஏறி, தடுமாறி உள்ளே விழுந்து, ஆபத்தை விலைக்கு வாங்கக்கூடும்.
  *என்ன செய்ய வேண்டும்?*
குழந்தைகளைத் தண்ணீர்த்தொட்டி அருகில் விளையாட விடக் கூடாது. தொட்டியை  எட்டும் உயரத்தில் அமைக்கக் கூடாது. அல்லது குழந்தைகளால் திறக்க முடியாதபடி மூடியே வைக்கவேண்டும்.

5.மருந்துகள்

பெரியவர்கள் மருந்து, மாத்திரைகளை சாப்பிடும்போது, அதைச் சாப்பிடுவதற்கு குழந்தைகளும் ஆசைப்படக்கூடும். குறிப்பாக மருந்தோ, மாத்திரையோ இனிப்பாக இருப்பது தெரிந்தால் அவற்றைச் சாப்பிட நினைப்பார்கள். அதனால் ஆபத்து நேரலாம்.
*என்ன செய்ய வேண்டும்?*
மருந்து, மாத்திரைகளைக் குழந்தைகள் எடுக்காதபடி பூட்டி வைக்கவும்.

6.அயன்பாக்ஸ்

நீங்கள் அவசர அவசரமாக துணியை அயன் செய்துவிட்டு வெளியே சென்றுவிடும் நேரத்தில், குழந்தை அதை எடுத்து, நானும் அயன் பண்ணுகிறேன் என்று கை, கால்களில் சுட்டுக்கொள்வதற்கு வாய்ப்பு உண்டு.
*என்ன செய்ய வேண்டும்?*
அயன் பண்ணிய உடனே, மின் இணைப்பிலிருந்து நீக்கி, அயன் பாக்ஸை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைத்துவிடவேண்டும்.

7.வாகன சாவி

ஸ்கூட்டி, கார், பைக் போன்ற வண்டிகளில் சாவியை போட்டுவிட்டு, மறந்து வேறு வேலைகளில் மூழ்கிவிடாதீர்கள். நீங்கள் இல்லாத சமயத்தில், குழந்தை சாவியைத் திருகி ஆன் செய்து, ரெய்ஸ் பண்ணி, அதனால் கீழே விழுந்து அடிபடும்.
*என்ன செய்ய வேண்டும்?*
வண்டியில் ஒருபோதும் சாவியை வைத்துவிட்டு நகரக்கூடாது. வண்டியை நிறுத்தியதும் சாவியை எடுத்து, குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். குழந்தையை வண்டியில் உட்கார வைத்துவிட்டு வேறு வேலைகளில் மூழ்கக்கூடாது. கையோடு அழைத்துச் செல்லவேண்டும்.

*8.கிணறு, குழிகள்*
கிணற்றில் அல்லது ஆழமான குழிக்குள் குழந்தைகள் விழுந்து இறக்க நேர்தல்.
*என்ன செய்ய வேண்டும்*
ஆழமான குழியை எதற்காகத் தோண்டியிருந்தாலும் அதை மூடி, பள்ளம் இருக்கிறது என்கிற அடையாளம் வைக்க வேண்டும்.
கிணறுகளின் சுவரை உயரமாகக் கட்டவேண்டும். தரையோடு தரையாக வைத்திருந்தால் ஆபத்து நிகழும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்