October 20, 2016

ஆசிரியர்கள் கை கட்டப்பட்டதால் ,மாணவர்கள் கையில் மதுபாட்டில் !!!


பள்ளிக்கு போதையில் வந்த மாணவர்கள்
சமீபகாலமாக குழந்தைகளை மது அருந்தவைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் மாணவர்கள் போதைக்கு
அடிமையாகிவருவதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பிறந்த நாள் விழா என்று கேக் வெட்டி கொண்டாடிய காலம் போய், இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் மது விருந்து வைத்து கொண்டாடுகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு போதையில் சில மாணவர்கள் சாலையில்

விழுந்துகிடக்கின்றனர். இது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு, கோவையில் பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில், திருப்பூர் அரசுப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததால், அவர்களை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. திருப்பூரில் நஞ்சப்பா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 80 வருடங்களாக செயல்பட்டும்வரும் இந்தப் பள்ளியில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று 12ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் மது அருந்திவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர்கள் மது அருந்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்துள்ளார். மாணவர்கள் மது அருந்தி பள்ளிக்கு வந்தது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி முருகன், மாணவர்களின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். மாணவர்களின் இந்த நிலைக்கு பெற்றோர்களும் காரணம். பள்ளிக்கு அனுப்புவதுடன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர். ஆசிரியர்கள் கண்காணித்தாலும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்.

கடந்த ஜூலை மாதம், ஆம்பூர் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 6 பேர் பிறந்த நாள் விழா என்றபெயரில் மது அருந்திவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளனர். மேலும் ஆசிரியர்களுடன் ரகளையில் ஈடுபட்டதால் பெற்றோர்களை வரவழைத்து பள்ளி நிர்வாகம் எச்சரித்து அனுப்பிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்