January 05, 2017

பொங்கல் பண்டிகைக்குள்: "அனைத்து ஏடிஎம்களிலும் ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டும்'..


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணம் வைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள்
செல்லாது என கடந்த நவம்பர் 8-ஆம் பிரதமர் மோடி அறிவித்தார். கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இதைதொடர்ந்து நாடு முழுவதும் வருமான வரித் துறையினர் திடீர் சோதனைகளை மேற்கொண்டு பல்லாயிரம் கோடி ரூபாய்களை பறிமுதல் செய்தனர்.
புதிய ரூ.2000, ரூ. 500 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஆனாலும் போதுமான அளவு வங்கிகளுக்கு வழங்கப்படாததால் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது.

பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடியே கிடக்கின்றன. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நடவடிக்கைக்கு பிறகு 50 நாள்கள் காத்திருக்கும்படி மத்திய அரசு மக்களுக்கு தெரிவித்தது. அதன்பிறகு பிரச்னை தீரும் என கூறப்பட்டது. ஆனால் 50 நாள்களை கடந்த பிறகு இப்பிரச்னை தீர்ந்தபாடில்லை.
ஏடிஎம்களில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வரை பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ.2 ஆயிரமாக இருந்தது. இதனை, ஜனவரி 1-ஆம் முதல் ரூ. 4500 ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ஆனால் வழக்கம்போல நாடு முழுவதும் பெரும்பாலான ஏடிஎம்கள் இன்னும் மூடியே கிடக்கின்றன. ஜனவரி மாதத்தில் போதிய அளவு வங்கியிலிருந்து பணம் எடுக்கலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். பணம் நிரப்பப்படும் ஏடிஎம்களின் முன் விடிய விடிய நீண்ட வரிசையில் காத்திருந்து எடுக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் அன்றாட அலுவல்களை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

அதே நேரத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி சில அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் மக்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் ஏதும் அதில் இல்லை. சாதாரண மக்கள் உடனடியாக பயன்பெறக் கூடிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழக மக்கள் தங்களுடைய பணத் தேவையை எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களையும் திறந்து வரும் பொங்கல் பண்டிகை வரை போதிய அளவுக்கு அவ்வப்போது பணத்தை நிரப்பி வந்தால் மட்டுமே ஓரளவுக்கு பணப் பிரச்னை தீரும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

எனவே தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் பொங்கல் பண்டிகை வரையிலாவது அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் போதிய அளவுக்கு பணத்தை நிரப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் பணத் தட்டுப்பாடு தீரும். இதில் ரிசர்வ் வங்கி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்