January 05, 2017

சமச்சீர் கல்வி: பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..


சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதோடு, கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகள் பின்பற்றப்படுகின்றன என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கால மாற்றத்துக்கு ஏற்ப சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர
வேண்டும் என்ற பத்திரிகை செய்தியை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பனின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியாகியுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2009-2010-இல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இப்பாடத்திட்டம் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் நிபுணர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. இது தவிர, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒலி, ஒளி குறுந்தகடுகள் மூலம் கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், 15 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், 3 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடங்களை ஒலி குறுந்தகடுகள் மூலம் கற்பிக்க முடிவு செய்துள்ளோம்.
இதுவரை 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறுந்தகடுகளுக்கான மொழிபெயர்ப்பு பணி 240 ஆசிரியர்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. காது கேட்காத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழியில் கற்பித்தலுக்கான சோதனை முயற்சி திண்டுக்கல் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கல்வி கற்பிப்பதில் தமிழக அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சீருடை உள்ளிட்ட 16 விதமான உதவிகளை அரசு வழங்குகிறது. இந்த உதவிக்கு 2015-2016 வரை ரூ. 3 ஆயிரத்து 45 கோடி ஒதுக்கப்பட்டது. மாணவர்கள் உதவிக்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படுகிறது. இவற்றை கண்காணிக்க மாவட்ட வாரியாக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வி தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், இந்த மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்